Saturday, 19 March 2016

மாணவர்களிடம் உத்வேக நெருப்பை பற்றவைக்கும் திரு.நந்தகுமார் IRS

மாணவச் செல்வங்களுக்கான ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி, அவர்களிடம் எந்த அளவுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் இன்று மேடவாக்கம் வித்யா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற LIVE YOUR DREAM நிகழ்ச்சி. 
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன், நண்பர் கதிரவனின் Town news விழா ஒன்றில் திரு.நந்தகுமார் IRS அவர்களை முதலில் சந்தித்த நான், அடுத்த வாரத்திலேயே அவருடன் ஒரு விரிவான நேர்காணல் நடத்தி அதனை அட்டைப்பட கட்டுரையாக புன்னகை கல்வி மாத இதழில் வெளியிட, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வருமானவரித்துறை இணை ஆணையராகப் பணியாற்றும் அவர், டாக்டர் கலாமைப் போன்று மாணவர்களிடம் உத்வேகம் பரப்பும் உன்னதப் பணியை ஆர்ப்பாட்டமின்றி செய்துவருகிறார்.
தமது பள்ளி மாணவர்களை உத்வேகப் படுத்திட திரு.நந்தகுமார் IRS அவர்களை அழைக்க முடியுமா என இளைய நண்பர் வித்யாசாகர் கடந்த வாரம் கேட்டிருந்தார். தகவலைச் சொன்ன நொடியிலேயே ஒப்புக் கொண்டு தேதியும் கொடுத்த திரு.நந்தகுமார், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓர் இலட்சிய வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை ஒன்றரை மணி நேரத்தில் கற்றுக் கொடுத்துவிட்டார். நிகழ்ச்சிக்கான அருமையான ஏற்பாடுகளை செய்திருந்தார் நண்பர் வித்யா.
"குடும்ப வறுமையாலும், படிப்பின்மீது கொண்ட வெறுப்பினாலும் பள்ளிப் படிப்பை கைவிட்டு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவன், திடீரென தன்னம்பிக்கை பெற்று தன்னை தரம் உயர்த்திக்கொண்டு, அடுத்த பத்தாண்டுகளுக்குள் சிவில் சர்வீஸ் தேர்வில் புவியியல் பாடத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து, இன்று பெரிதும்மதிக்கப்படும் வருமானவரித்துறை இணை ஆணையராக உயர்ந்த கதை நீங்கள் எல்லோரும் மனதில் நிறுத்த வேண்டிய வெற்றிக் கதை" என்ற சுருக்கமான அறிமுகத்தை நான் அளித்தேன்.
மாணவர்களிடம் நெருங்கிச் சென்று பேசத் தொடங்கிய திரு.நந்தகுமார், அவர்கள் எல்லோரையும் உலுக்கி எடுத்து விட்டார். சீருடை கூட வாங்க முடியாமல் கிழிந்த ஆடைகளுடன் தான் அல்லல்பட்ட நாட்களையும், dyslexia கற்றல் குறைபாடு பிரச்சினையால் படிப்பின்மீது வெறுப்பு கொண்ட நாட்களையும் தயக்கமின்றி விவரித்த அவர், எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தான் வீறுகொண்டு எழுந்த நிகழ்வுகளை விளக்கியபோது, மாணவர்கள் தங்களை அவரது இடத்தில்வைத்து நம்பிக்கையுடன் சிந்தித்ததைப் பார்க்க முடிந்தது. 
இடையில் நின்றுபோன தனது பள்ளிப்படிப்பை எப்படியாவது மீண்டும் தொடரவேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் அணுகியபோது தன்னை சேர்க்கமறுத்து துரத்திவிட்ட சில பள்ளிகளும், எப்படியாவது ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் அணுகிய போது தன்னை அவமானப்படுத்தி துரத்திவிட்ட சில கல்லூரிகளும், தற்போது தனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க காத்திருப்பது பற்றி 
வேடிக்கையுடன் குறிப்பிட்ட அவர், மனதில் பெரிய இலட்சியமும் அதனை சாதிக்கும் வெறியும் இருந்தால் வெற்றி தேடி வரும் என்று நம்பிக்கையுடன் விளக்கினார். 
"இவனுக்கு படிப்பு என்பது சுத்தமாக வராது", "இவன் ஒரு மக்குப் பையன்" என்று எந்த சமூகம் கேலியுடன் சொன்னதோ, அந்த சமூகத்தின் பிரதமர் உரையையும் குடியரசுத் தலைவர் உரையையும் தயாரிக்கும் உயர் அதிகாரியாக தன்னைத் தரம் உயர்த்தி, அந்த சமூகத்தின் முன் தன்னை நிரூபித்துக் காட்ட முடிந்ததை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 
"பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு, பின் உருண்டு புரண்டு படித்துத் தேறிய எனக்கே இந்திய குடியரசுத் தலைவருடன் சரிசமமாக அமர்ந்து பேசும் வாய்ப்பும், அமெரிக்க அதிபர் ஒபாமாவால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உபசரிக்கப்படும் வாய்ப்பும் கிடைத்தது என்றால், என்னைவிட பல மடங்கு கூடுதல் வாய்ப்பு வசதிகளைப் பெற்றிருக்கும் உங்களுக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்று பேசி, மாணவர்களுக்குப் புது இரத்தம் பாய்ச்சினார். 
அவர் கற்றுகொடுத்த முக்கிய படிப்பினைகள்:
1.நம்பிக்கைக்கு மிகப் பெரிய சக்தி உண்டு - என்னால் முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நம்பினால் அது நடந்துவிடும். 
2.உங்களுக்குப் பிடித்த துறையில் பத்து ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெறுவதாக கற்பனை செய்யுங்கள்.
3.அந்த பிரமாண்ட வெற்றியை அடைவதற்கு மதிப்பெண்களும் அவசியம் என்பதால் படிப்பில் இப்போதே கவனம் செலுத்துங்கள்.
4.மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்தால் படிப்பு இனிமையாகிவிடும் என்பது எனது அனுபவப் பாடம்.
5.நடைமுறையுடன் தொடர்புபடுத்தி படிக்கக் கற்றுகொண்டால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறுவது என்பது எல்லாம் மிகமிக சுலபம்.
6.வெற்றி என்பது திடீர் என வந்து குதிப்பதில்லை.
7.ஒவ்வொரு நாளும் படிப்பினைபெற்று முன்னேறுபவர்களுக்கு மட்டுமே வெற்றி சாத்தியம். 
"திரு.நந்தகுமாரின் உரையில் இருந்து என்ன புதிதாகக் கற்றுக் கொண்டீர்கள் என்பது குறித்து ஓரிரு மாணவர்கள் வந்து கருத்துச் சொல்லுங்கள்" என நான் கூறியவுடன் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேடைக்கு வந்துவிட்டனர். பெரிதினும் பெரிதாய் சிந்திக்கும் வேட்கை அந்த மாணவச் செல்வங்களிடம் தொற்றிக் கொண்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 
முத்தாய்ப்பாகப் பேசிய ஒரு மாணவன், "திரு.நந்தகுமாருடன் கைகுலுக்க வேண்டும் என்பது நேற்றுவரை எனது ஆசை. ஆனால் எனக்கு இப்போது ஒரு மிகப் பெரிய லட்சிய வேட்கை வந்திருகிறது. அந்த லட்சியத்தை சாதித்தபின்னரே திரு.நந்தகுமாருடன் கைகுலுக்குவேன்" என்று சபதம் போட்டபோது எல்லோரும் மனதுக்குள் அதிர்ந்தனர். 
இனிய நண்பர் நந்தகுமார்,
அலங்கார மேடைப் பேச்சாக இல்லாமல் மாணவர்களின் உள்ளம்தொட்டுப் பேசும் உங்கள் பணி தொடரட்டும்!
மாணவச் செல்வங்களிடம் லட்சிய வேட்கையை விதைக்கும் உங்கள் வேள்வி வெல்லட்டும்!
உங்களைப் போன்ற லட்சிய முன்மாதிரிகளுக்கும் பள்ளிகளுக்கும் இடையே உறவுப்பாலமாக புன்னகை கல்வி மாத இதழ்களின் பணிகள் விரியும். 
அன்புடன்
சுசி திருஞானம்
ஆசிரியர், KIDS Punnagai & GENIUS Punnagai

No comments:

Post a Comment