ஒருவரது உயர்வையும் தாழ்வையும் தீர்மானிக்கிற முக்கியமான காரணிகளில் ஒன்று சுயமதிப்பு. நமது இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சராசரி வாழ்க்கைக்குள் முடங்கிவிடுவதற்கு மிக முக்கியமான காரணம் குறைவான சுயமதிப்பு.
உங்களை உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறது?
சிறந்தவற்றைப் பெரும் தகுதி உங்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது?
பிரச்சினைகள் வரும்போது அவை உங்களை மூழ்கடிக்க அனுமதிக்கிறீர்களா அல்லது துணிச்சலோடு தீர்வுகளைத் தேடுகிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால் உங்கள் சுயமதிப்பு உங்களுக்குத் தெரியவரும்.
நம்மில் பலரும், நம்மைப் பற்றிய சுயமதிப்பீட்டை குறைவாகவே வைத்திருக்கிறோம். 'நம்மைச் சுற்றியுள்ள சில வெற்றியாளர்களைப் போல் நமக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை' என்பதுபோன்ற தாழ்வான எண்ணங்கள் நமக்குள் தலைதூக்குவது இயல்பு. சற்றே அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நம்மைப் பற்றிய அந்தக் கருத்துக்கள் தவறானவை என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
'இந்த உலகில் எல்லாக் குழந்தைகளுமே மேதைகளாகத் தான் பிறக்கிறார்கள்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் மகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மேதைகளாகப் பிறந்த நாம் எதற்கு சராசரி வாழ்க்கைக்குள் முடங்கவேண்டும்?
சராசரி வாழ்க்கையைப் புழுக்கள் கூட வாழ்ந்து முடித்து விடமுடியும். நாம் சாதனை வாழ்க்கையை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
சாதனை வாழ்க்கை வாழவேண்டும் என்றால் முதலில் நமது சுய மதிப்பை உயர்த்தவேண்டும்.
சிறு வயதில் இருந்து நாம் பெற்ற சிறிய, பெரிய வெற்றிகளை மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும். எதிர்காலத்தில் நமக்குப் பிடித்த துறையில் நாம் சாதிக்கவிருக்கும் வெற்றிகளை காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும். நிகழ்காலத்தில் நம் மனதுக்குள் நிகழ்த்தும் உரையாடலை நேர்மறையாக அமைக்கவேண்டும்.
உங்கள் சுயபேச்சு எப்படி இருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். தினம்தோறும் நாம் நமக்குள் 50 ஆயிரம் முறை பேசிக்கொள்வதாக உளவியல் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். 'எல்லோரும் என்னை விரும்புகிறார்கள்', 'என்னால் முடியும்', 'நான் சாதித்துக் காட்டுவேன்' என்பதுபோன்ற நேர்மறையான சுயபேச்சு கொண்டவர்கள் அனைவரும் ஜெயிக்கிறார்கள்.
இன்று முதல் உங்கள் சிந்தனையை தன்னம்பிக்கை மிக்கதாக மாற்றுங்கள். உங்கள் சுயபேச்சை நேர்மறையானதாக மாற்றுங்கள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன், தலைநிமிர்ந்து வாழுங்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் மனைவியும், பெண்ணுரிமைப் போராளியுமான எலியனார் ரூஸ்வெல்ட்டின் வரிகளை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்: "தங்கள் கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கே எதிர்காலம் சொந்தம்."
Those who had high self-worth, had only achieved great things in histry.
ReplyDelete