காலம் பொன் போன்றது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனினும் நம்மில் பலர், நேரத்தை பயனுள்ள வகையில் நிர்வகிக்கத் தவறி விடுகிறோம்.
நமது கையில் இருக்கும் பணிகளில் மிக முக்கியமான பணி எதுவோ, அதில் நமது உழைப்பை ஒருமுகப்படுத்துவதுதான் நேர நிர்வாகத்தின் சாராம்சம்.
பரேட்டோ விதி என்ற நேர நிர்வாக விதி பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நமது கையில் இருக்கும் பணிகளில் முக்கியத்துவம் மிகுந்த 20 சதவீத பணிகள், 80 சதவீத மதிப்பைக் கொண்டவை என்று கூறுகிறது பரேட்டோ விதி.
அதாவது, இன்றைய தினம் நீங்கள் 10 பணிகள் செய்ய வேண்டும் என்றால், அதில் 2 முக்கியப் பணிகள், மற்ற 8 பணிகளின் மதிப்புக்கு சமமானவை என்கிறது இந்த விதி.
இந்த விதிக்கு இணங்க, நான் கூறும் வேலைமுறையை இன்றுமுதல் பின்பற்றுங்கள்.
1. உங்களது ஒரு நாளுக்கான பணிகள் அனைத்தையும் முந்திய நாள் இரவே எழுதிவையுங்கள்.
2. அந்தப் பணிகளில் 10 முக்கியப் பணிகளை அதிகாலையில் பட்டியல் இடுங்கள்.
3. அந்தப் பட்டியலில் 80 சதவீத மதிப்பைக் கொண்ட 2 அதிமுக்கியப் பணிகள் எவை என்பதை கவனமாக கண்டறிந்து அவற்றை பச்சை மையால் குறியிடுங்கள்.
4. அந்த 2 அதிமுக்கியப் பணிகளை சிறப்பாக செய்து முடித்திட உங்கள் நேரம், உழைப்பு, திறன்கள், தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.
5. அவை முடிந்தவுடன் அடுத்த கட்ட முக்கியத்துவம்வாய்ந்த 2 பணிகளை நிறைவேற்றுங்கள்.
இந்த நேரத்தில், இப்போதைய கணத்தில், நான் எந்த வேலையை செய்தால் அது மிகச் சிறந்த பயனைத் தரும் என்று உங்களை நீங்களே அவ்வப்போது கேள்வி கேளுங்கள். உங்கள் பதில் எதுவோ அந்தப் பணியை நிறைவேற்றுங்கள்.
அதிசயிக்கத்தக்க பயனைத் தரும் 20 சதவீதப் பணிகளை அடையாளம் கண்டு உங்கள் உழைப்பை ஒன்றுகுவிக்கக் கற்றுகொண்டால் நீங்கள் வெற்றியாளர் ஆவது உறுதி.
வாழ்த்துகளுடன்
சுசி திருஞானம்
No comments:
Post a Comment