இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது திருக்குறள். ஆனால் இன்றும் அன்றாட வாழ்வில் நாம் நடைமுறைப்படுத்த உகந்த உயர்ந்த கருத்துகளுக்கு உறைவிடமாக இருக்கிறது.
என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் சதீஷ்தவான் 1970 களில் இஸ்ரோ தலைவராகப் பணியாற்றி வந்தார்.
அப்போது இஸ்ரோவுக்கான ஒரு முக்கியமான திட்ட இலக்கை ஏற்படுத்தி அத்திட்டத்தை என்னிடம் ஒப்படைத்தார்.
அத்திட்டம் இந்தியாவின் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் இராக்கெட்டை சொந்தமாக இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டுமானம் செய்யும் மாபெரும் பொறுப்பாகும்.
அப்பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது அவர் சொன்னார்: “கலாம், நாம் எந்தப் பணியையுமே செய்யாமல் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு குறிக்கோளை முனைப்பாகக் கையில் எடுத்துக் கொண்டு, அதை நிறைவேற்ற முற்பட்டால் பல பிரச்சனைகள் நம்மை வழிமறித்து திசைதிருப்ப முயற்சிக்கும். பிரச்சனைகள் நம்மை வழிநடத்திச் செல்ல நாம் அனுமதிக்கக்கூடாது. மாறாக, அந்தப் பிரச்சனைகளைச் சமாளித்து, அதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பிய குறிக்கோளை அடைதல் வேண்டும்” என்றார்.
என்ன ஆழமான அறிவுரை! எனக்கு ஒரு வாழ்க்கைக் கல்வியாக என்னை நானே உணர்ந்து உய்விக்க வந்த அறிவுரை அது.
உடனே எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது. இந்த அற்புதமான இலட்சியக் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எவ்வளவு அழகாக இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் தெரியுமா?
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படா தவர்
அதாவது : ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் ஆங்காங்கே பிரச்சனைகள் எதிர்படும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள், அந்தத் துன்பங்களுக்கேகூட துன்பம் கொடுத்து வாழ்வில் வெற்றியடைவர்.
பெரிய கடமைகளில் ஈடுபடும் எல்லோருக்கும் தோல்வி மனப்பான்மை தலைதூக்கும் என்பதை அங்கீகரித்துப் பேசும் திருவள்ளுவர், "அவ்வாறு தோல்வி மனப்பான்மை தலைதூக்கும் போதெல்லாம் அந்த தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுக்க வேண்டும். We should defeat the defeatist tendency" என்று வலியுறுத்துகிறார். எவ்வளவு அற்புதமான குறள்!
இரண்டே வரிகளில் திருவள்ளுவர் வழங்கிய இந்த அறிவுரையும், பேராசிரியர் சதீஷ் தவன் வழங்கிய விளக்க உரையும் அந்தத் திட்டத்தில் நான் கடுமையாக உழைத்த ஏறக்குறைய ஏழாண்டுகாலம் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு ஓர் உறுதுணையாக அமைந்தன.
மிகப்பெரிய தோல்விகளை நாங்கள் சந்தித்தோம். பெரும் தோல்விகளைக் கூட சவாலாக ஏற்றுக் கொண்டு, மன தைரியத்துடன் தொடர்ந்து உழைத்து வெற்றிபெறுவதற்கு "தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுக்க வேண்டும். We should defeat the defeatist tendency" என்று வலியுறுத்திய இந்தக் குறளே எனது வழிகாட்டியாக அமைந்தது.
No comments:
Post a Comment