Sunday, 20 March 2016

கைகள் இல்லை... கால்கள் இல்லை... கவலையும் இல்லை!


ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982 ஆம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.



இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த அந்தக் குழந்தையைப் பார்த்து அவர்களுக்கு அதிர்ச்சி. சில நாட்கள் கண்ணீர்விட்டு அழுதுமுடித்த அவர்கள், விரைவில் தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டனர்.

அவனுக்கு நிக் வுஜிசிக்  என்று பெயர் சூட்டிய அவர்கள், சவால்களை சாதனைகளாக மாற்றும் சாகசக்காரனாக அவனை வளர்க்கத் தீர்மானித்தனர்.



பள்ளியில் சேர்க்க நிக்கை அழைத்துச் சென்ற அவனது பெற்றோருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எந்தப் பள்ளியும் அவனை சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை.

கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை சாதாரணப் பள்ளிகளில் படிப்பதை ஆஸ்திரேலிய சட்டம் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டத்தையே மாற்றவைத்து அவனைப் பள்ளியில் சேர்த்தனர்.

மிகக் கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னர், தன் இடுப்போடு ஒட்டியிருக்கும் மூன்று விரல்களால் எழுதவும், வாயினால் ஓவியம் வரையவும் நிக் கற்றுக் கொண்டார். 




தன்னம்பிக்கை, விருப்பம், முயற்சி, பயிற்சி, விடாப்பிடியான உறுதி இவை நிக்கின் இயல்பாக மாறிவிட்டன. பள்ளியின் மாணவர் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார் நிக்.

பெற்றோர் தந்த ஊக்கமும், நண்பர்கள் தந்த உத்வேகமும் நிக் வுஜிசிக்கை தன்னம்பிக்கையின் சின்னமாக மாற்றி விட்டன.



இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் ஸ்கேட்டிங் செய்கிறார்.

தனது கால் விரல்களால் கம்ப்யூட்டரில் டைப்செய்கிறார்.

அற்புதமாக நீச்சலடிக்கிறார்.



துள்ளிக் குதித்து கோல்ப் விளையாடுகிறார்.

பிரமாண்டமான மாநாடுகளில் சுயமுன்னேற்றப் பயிற்சிகளை வழங்குகிறார்.



44 நாடுகளில் உள்ள 50 லட்சம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கைப் பயிற்சி அளித்திருக்கிறார்.



நிக்கின் அனுபவ வார்த்தைகள் ஒவ்வொன்றும் இளைய தலைமுறைக்கு உத்வேக டானிக்:

"இல்லாததை நினைத்து ஒரு நொடியையும் வீணடிக்காதே -  இருப்பதை கொண்டாடு!"

"என்னால் இவ்வளவு சாதிக்க முடிந்தால் உன்னால் எவ்வளவு முடியும் என எண்ணிப்பார். தடைகளைத் தகர்த்து சாதித்துக் காட்டு" 

ஏழாண்டுகாலம் என் காதுகளில் ஒலித்த குறள்! - டாக்டர் அப்துல் கலாம்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது திருக்குறள். ஆனால் இன்றும் அன்றாட வாழ்வில் நாம்  நடைமுறைப்படுத்த உகந்த  உயர்ந்த கருத்துகளுக்கு உறைவிடமாக இருக்கிறது.

என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் சதீஷ்தவான் 1970 களில் இஸ்ரோ தலைவராகப் பணியாற்றி வந்தார். 

அப்போது இஸ்ரோவுக்கான ஒரு முக்கியமான திட்ட இலக்கை ஏற்படுத்தி அத்திட்டத்தை என்னிடம் ஒப்படைத்தார். 

அத்திட்டம் இந்தியாவின் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் இராக்கெட்டை சொந்தமாக இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டுமானம் செய்யும் மாபெரும் பொறுப்பாகும். 

அப்பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது அவர் சொன்னார்: “கலாம், நாம் எந்தப் பணியையுமே செய்யாமல் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு குறிக்கோளை முனைப்பாகக் கையில் எடுத்துக் கொண்டு, அதை நிறைவேற்ற முற்பட்டால் பல பிரச்சனைகள் நம்மை வழிமறித்து திசைதிருப்ப முயற்சிக்கும். பிரச்சனைகள் நம்மை வழிநடத்திச் செல்ல நாம் அனுமதிக்கக்கூடாது. மாறாக, அந்தப் பிரச்சனைகளைச் சமாளித்து, அதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பிய குறிக்கோளை அடைதல் வேண்டும்” என்றார். 

என்ன ஆழமான அறிவுரை! எனக்கு ஒரு வாழ்க்கைக் கல்வியாக என்னை நானே உணர்ந்து உய்விக்க வந்த அறிவுரை அது.  

உடனே எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது. இந்த அற்புதமான இலட்சியக் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எவ்வளவு அழகாக இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் தெரியுமா?


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பைப் படா தவர் 

அதாவது : ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் ஆங்காங்கே பிரச்சனைகள் எதிர்படும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள், அந்தத் துன்பங்களுக்கேகூட துன்பம் கொடுத்து வாழ்வில் வெற்றியடைவர். 

பெரிய கடமைகளில் ஈடுபடும் எல்லோருக்கும் தோல்வி மனப்பான்மை தலைதூக்கும் என்பதை அங்கீகரித்துப் பேசும் திருவள்ளுவர், "அவ்வாறு தோல்வி மனப்பான்மை தலைதூக்கும் போதெல்லாம் அந்த தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுக்க வேண்டும். We should defeat the defeatist tendency" என்று வலியுறுத்துகிறார். எவ்வளவு அற்புதமான குறள்!  

இரண்டே வரிகளில் திருவள்ளுவர் வழங்கிய இந்த அறிவுரையும், பேராசிரியர் சதீஷ் தவன் வழங்கிய விளக்க உரையும்  அந்தத் திட்டத்தில் நான் கடுமையாக உழைத்த ஏறக்குறைய ஏழாண்டுகாலம் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு ஓர் உறுதுணையாக அமைந்தன. 

மிகப்பெரிய தோல்விகளை நாங்கள் சந்தித்தோம். பெரும் தோல்விகளைக் கூட சவாலாக ஏற்றுக் கொண்டு, மன தைரியத்துடன் தொடர்ந்து உழைத்து வெற்றிபெறுவதற்கு "தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுக்க வேண்டும். We should defeat the defeatist tendency" என்று வலியுறுத்திய இந்தக் குறளே எனது வழிகாட்டியாக அமைந்தது.

Saturday, 19 March 2016

மாணவர்களிடம் உத்வேக நெருப்பை பற்றவைக்கும் திரு.நந்தகுமார் IRS

மாணவச் செல்வங்களுக்கான ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி, அவர்களிடம் எந்த அளவுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் இன்று மேடவாக்கம் வித்யா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற LIVE YOUR DREAM நிகழ்ச்சி. 
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன், நண்பர் கதிரவனின் Town news விழா ஒன்றில் திரு.நந்தகுமார் IRS அவர்களை முதலில் சந்தித்த நான், அடுத்த வாரத்திலேயே அவருடன் ஒரு விரிவான நேர்காணல் நடத்தி அதனை அட்டைப்பட கட்டுரையாக புன்னகை கல்வி மாத இதழில் வெளியிட, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வருமானவரித்துறை இணை ஆணையராகப் பணியாற்றும் அவர், டாக்டர் கலாமைப் போன்று மாணவர்களிடம் உத்வேகம் பரப்பும் உன்னதப் பணியை ஆர்ப்பாட்டமின்றி செய்துவருகிறார்.
தமது பள்ளி மாணவர்களை உத்வேகப் படுத்திட திரு.நந்தகுமார் IRS அவர்களை அழைக்க முடியுமா என இளைய நண்பர் வித்யாசாகர் கடந்த வாரம் கேட்டிருந்தார். தகவலைச் சொன்ன நொடியிலேயே ஒப்புக் கொண்டு தேதியும் கொடுத்த திரு.நந்தகுமார், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓர் இலட்சிய வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை ஒன்றரை மணி நேரத்தில் கற்றுக் கொடுத்துவிட்டார். நிகழ்ச்சிக்கான அருமையான ஏற்பாடுகளை செய்திருந்தார் நண்பர் வித்யா.
"குடும்ப வறுமையாலும், படிப்பின்மீது கொண்ட வெறுப்பினாலும் பள்ளிப் படிப்பை கைவிட்டு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவன், திடீரென தன்னம்பிக்கை பெற்று தன்னை தரம் உயர்த்திக்கொண்டு, அடுத்த பத்தாண்டுகளுக்குள் சிவில் சர்வீஸ் தேர்வில் புவியியல் பாடத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து, இன்று பெரிதும்மதிக்கப்படும் வருமானவரித்துறை இணை ஆணையராக உயர்ந்த கதை நீங்கள் எல்லோரும் மனதில் நிறுத்த வேண்டிய வெற்றிக் கதை" என்ற சுருக்கமான அறிமுகத்தை நான் அளித்தேன்.
மாணவர்களிடம் நெருங்கிச் சென்று பேசத் தொடங்கிய திரு.நந்தகுமார், அவர்கள் எல்லோரையும் உலுக்கி எடுத்து விட்டார். சீருடை கூட வாங்க முடியாமல் கிழிந்த ஆடைகளுடன் தான் அல்லல்பட்ட நாட்களையும், dyslexia கற்றல் குறைபாடு பிரச்சினையால் படிப்பின்மீது வெறுப்பு கொண்ட நாட்களையும் தயக்கமின்றி விவரித்த அவர், எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தான் வீறுகொண்டு எழுந்த நிகழ்வுகளை விளக்கியபோது, மாணவர்கள் தங்களை அவரது இடத்தில்வைத்து நம்பிக்கையுடன் சிந்தித்ததைப் பார்க்க முடிந்தது. 
இடையில் நின்றுபோன தனது பள்ளிப்படிப்பை எப்படியாவது மீண்டும் தொடரவேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் அணுகியபோது தன்னை சேர்க்கமறுத்து துரத்திவிட்ட சில பள்ளிகளும், எப்படியாவது ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் அணுகிய போது தன்னை அவமானப்படுத்தி துரத்திவிட்ட சில கல்லூரிகளும், தற்போது தனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க காத்திருப்பது பற்றி 
வேடிக்கையுடன் குறிப்பிட்ட அவர், மனதில் பெரிய இலட்சியமும் அதனை சாதிக்கும் வெறியும் இருந்தால் வெற்றி தேடி வரும் என்று நம்பிக்கையுடன் விளக்கினார். 
"இவனுக்கு படிப்பு என்பது சுத்தமாக வராது", "இவன் ஒரு மக்குப் பையன்" என்று எந்த சமூகம் கேலியுடன் சொன்னதோ, அந்த சமூகத்தின் பிரதமர் உரையையும் குடியரசுத் தலைவர் உரையையும் தயாரிக்கும் உயர் அதிகாரியாக தன்னைத் தரம் உயர்த்தி, அந்த சமூகத்தின் முன் தன்னை நிரூபித்துக் காட்ட முடிந்ததை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 
"பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு, பின் உருண்டு புரண்டு படித்துத் தேறிய எனக்கே இந்திய குடியரசுத் தலைவருடன் சரிசமமாக அமர்ந்து பேசும் வாய்ப்பும், அமெரிக்க அதிபர் ஒபாமாவால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உபசரிக்கப்படும் வாய்ப்பும் கிடைத்தது என்றால், என்னைவிட பல மடங்கு கூடுதல் வாய்ப்பு வசதிகளைப் பெற்றிருக்கும் உங்களுக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்று பேசி, மாணவர்களுக்குப் புது இரத்தம் பாய்ச்சினார். 
அவர் கற்றுகொடுத்த முக்கிய படிப்பினைகள்:
1.நம்பிக்கைக்கு மிகப் பெரிய சக்தி உண்டு - என்னால் முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நம்பினால் அது நடந்துவிடும். 
2.உங்களுக்குப் பிடித்த துறையில் பத்து ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெறுவதாக கற்பனை செய்யுங்கள்.
3.அந்த பிரமாண்ட வெற்றியை அடைவதற்கு மதிப்பெண்களும் அவசியம் என்பதால் படிப்பில் இப்போதே கவனம் செலுத்துங்கள்.
4.மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்தால் படிப்பு இனிமையாகிவிடும் என்பது எனது அனுபவப் பாடம்.
5.நடைமுறையுடன் தொடர்புபடுத்தி படிக்கக் கற்றுகொண்டால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறுவது என்பது எல்லாம் மிகமிக சுலபம்.
6.வெற்றி என்பது திடீர் என வந்து குதிப்பதில்லை.
7.ஒவ்வொரு நாளும் படிப்பினைபெற்று முன்னேறுபவர்களுக்கு மட்டுமே வெற்றி சாத்தியம். 
"திரு.நந்தகுமாரின் உரையில் இருந்து என்ன புதிதாகக் கற்றுக் கொண்டீர்கள் என்பது குறித்து ஓரிரு மாணவர்கள் வந்து கருத்துச் சொல்லுங்கள்" என நான் கூறியவுடன் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேடைக்கு வந்துவிட்டனர். பெரிதினும் பெரிதாய் சிந்திக்கும் வேட்கை அந்த மாணவச் செல்வங்களிடம் தொற்றிக் கொண்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 
முத்தாய்ப்பாகப் பேசிய ஒரு மாணவன், "திரு.நந்தகுமாருடன் கைகுலுக்க வேண்டும் என்பது நேற்றுவரை எனது ஆசை. ஆனால் எனக்கு இப்போது ஒரு மிகப் பெரிய லட்சிய வேட்கை வந்திருகிறது. அந்த லட்சியத்தை சாதித்தபின்னரே திரு.நந்தகுமாருடன் கைகுலுக்குவேன்" என்று சபதம் போட்டபோது எல்லோரும் மனதுக்குள் அதிர்ந்தனர். 
இனிய நண்பர் நந்தகுமார்,
அலங்கார மேடைப் பேச்சாக இல்லாமல் மாணவர்களின் உள்ளம்தொட்டுப் பேசும் உங்கள் பணி தொடரட்டும்!
மாணவச் செல்வங்களிடம் லட்சிய வேட்கையை விதைக்கும் உங்கள் வேள்வி வெல்லட்டும்!
உங்களைப் போன்ற லட்சிய முன்மாதிரிகளுக்கும் பள்ளிகளுக்கும் இடையே உறவுப்பாலமாக புன்னகை கல்வி மாத இதழ்களின் பணிகள் விரியும். 
அன்புடன்
சுசி திருஞானம்
ஆசிரியர், KIDS Punnagai & GENIUS Punnagai

Sunday, 13 March 2016

தோல்விகளே வருக! - ஹென்றி போர்ட்


ஹென்றி போர்ட்
கார் வடிவமைப்பின் பிதாமகன்!
பிரமாண்ட ஆலைத்தொழில் சிந்தனைக்கு வித்திட்ட மாமேதை!
பல லட்சம் தொழில் முனைவோருக்கு முன்மாதிரி!

ஹென்றி போர்ட் ஆரம்ப கட்டத்தில்
தொழில் தொடங்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார்.
ஒரு முறை அல்ல இரண்டு முறை
படுதோல்வி அடைந்தார்.

கடன் கொடுத்தவர்களின்
நிந்தனைக்கு ஆளானார்.
தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் உத்தியை
பெரும் அவமானங்களுக்கு இடையே கற்றுக் கொண்டார்.

தனது 23 ஆவது வயதில் தாமஸ் ஆல்வா எடிசனின் கம்பெனியில்
பொறியாளராக வேலைபார்த்துவந்தார் ஹென்றி போர்ட்.

1885 ஆம் ஆண்டில் ஒரு நாள்
எரிவாயுவால் இயங்கும் மோட்டாரை கவனித்த ஹென்றி போர்ட்,
இதைவைத்து குதிரையில்லாத வண்டியை உருவாக்கினால்
போக்குவரத்து முறையில் ஒரு புரட்சியை உருவாக்கிவிடலாம் என்று கனவு கண்டார்.

அன்று முதல் தனது வீட்டின் பின்புறத்தில்
ஒரு உலைக் கூடத்தை உருவாக்கி,
மோட்டார் வாகனத்தை வடிவமைக்கும் வேலையை
தவம்போல் மேற்கொண்டார்.

ஏனடா உன் நேரத்தை வீணடிக்கிறாய் என்று வசைபாடினார் தந்தை.
வாழ்க்கையை சுகமாக வாழத் தெரியாதவன் என்று நகையாடினர் நண்பர்கள்.

பெரும் போராட்டங்களுக்குப் பின்
குவாட்ரி சைக்கிள் என பெயரிடப்பட்ட
குதிரையில்லாத வண்டியை உருவாக்குவதில் வெற்றிபெற்ற ஹென்றி போர்ட்
அதேபோன்ற வண்டிகளை தயாரிக்க நிதி திரட்டினார்.

பல அவமானங்களுக்குப் பின்னர்
வில்லியம் மர்பி என்ற தொழிலதிபரை சந்தித்து நிதி கோரினார்.
வில்லியம் மர்பி கொடுத்த நிதி உதவியில்
டெட்ராய்ட் மோட்டார் கம்பெனியைத் தொடங்கினார் ஹென்றி போர்ட்

உதிரி பாகங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததாலும்
வாடிக்கையாளர்களைக் கவரும் வடிவமைப்பு இல்லாததாலும்
எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
டெட்ராய்ட் மோட்டார் கம்பெனி மூடப்பட்டது.

தோல்வியில் இருந்து கற்ற பாடங்களுடன்
புதிய கம்பெனி தொடங்க பலரையும் சந்தித்து நிதி உதவி கோரினார்.
தோல்வியே மிஞ்சியது.
வில்லியம் மர்பியை மீண்டும் சந்தித்து நிதி உதவிக்காக கெஞ்சினார் ஹென்றி போர்ட்.

இந்த முறை
நிபந்தனைகளுடன் நிதி உதவி தருவதாக ஒப்புக் கொண்டார் வில்லியம் மர்பி.
ஹென்றி போர்ட் கம்பெனி என்ற பெயரில்
இரண்டாவது ஆலையைத் தொடங்கினார்  ஹென்றி போர்ட்.

வில்லியம் மர்பி நியமித்த நிதி ஆலோசகர்கள்
புதிய ஆலையின் எல்லா செயல்பாடுகளிலும் தலையிடவே
வெறுத்துப்போனார் ஹென்றி போர்ட்.
ஒரே வருடத்தில் ஹென்றி போர்ட் கம்பெனியும் மூடப் பட்டது.

எல்லா இடங்களிலும் அவமானமே மிஞ்சியது.
ஹென்றி போர்ட்  பெயரைக் கேட்டாலே
நிதி நிறுவனங்கள் முகம் சுளித்தன.
உறவினர்கள் நண்பர்கள் ஓடி ஒளிந்தனர்

ஆனால் ஹென்றி போர்ட்டுக்கு
இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உருவாகி இருந்தது.
ஒரு கார் தயாரிப்பு கம்பெனி எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதை
இரு பெரும் தோல்விகளில் இருந்து பாடமாகக் கற்று வைத்திருந்தார் அவர்.

மீண்டும் முயற்சி செய்து,
தோல்வியை தோற்கடிக்க உத்வேகத்துடன் களம் இறங்கினார் ஹென்றி போர்ட்.
பல மாதங்கள் முயற்சிக்குப் பின்னர் அலெக்சாண்டர் மால்கம்சன் என்ற பெரும் தொழிலதிபரிடம்
தனது திட்டத்தை எடுத்துரைத்து அவரது  நம்பிக்கையைப் பெற்றார் ஹென்றி போர்ட்.

போர்ட் மோட்டார் கம்பெனி என்ற பெயரில்
மூன்றாவது கம்பெனியைத்  தொடங்கிய ஹென்றி போர்ட்,
இந்த முறை தனது அனுபவ பாடங்களையெல்லாம் ஓன்று திரட்டி
வெற்றிக்காக வெறியுடன் உழைத்தார்.

வாடிக்கையாளர் விரும்பும் அழகிய கார் வடிவமைப்புக்கு முதல் முக்கியத்துவம் அளித்தார்.
வாடிக்கையாளர் விரும்பும் வேகத்தில் கார்களை தயாரித்து அளிக்க
உலகின் மிகப் பெரிய உற்பத்தித் தொடர் ஆலையை உருவாக்கினார்.
நிதி முதலீடு செய்தவர்கள் உற்பத்தியில் தலையிடாமல் பார்த்துக் கொண்டார்.

விளைவு?
1904 ஆம் ஆண்டுக்குள் உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமானது  
போர்ட் மோட்டார் கம்பெனி.
100 ஆண்டுகளுக்குப் பின்னரும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகத்
தொடர்கிறது போர்ட் மோட்டார் கம்பெனி.

ஹென்றி போர்ட் அடைந்த இமாலய வெற்றிகளைப் பற்றி
இன்றும் உலகம் பேசுகிறது.

தனது படுதோல்விகளையும் அவமானங்களையும்
வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிய அந்த மேதையின் வார்த்தைகளை கவனியுங்கள்:

"தோல்வி குறித்து அவமானப்பட எதுவுமில்லை.
தோல்வி என்பது, பாடம் கற்றுக் கொண்டு,
மேலும் புத்திசாலித் தனமாக மீண்டும் தொடங்கி முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு"

"Failure is simply the opportunity to begin again,
this time more intelligently." - Henry Ford
 

Saturday, 12 March 2016

தோல்வி என்பது வெற்றியின் முதல் படி!


ஆபிரிக்காவுக்கு சுற்றுலா போன ஓர் இளைஞன் ஒரு நாள் பசுமையான கிராமத்தின் வழியே நடந்து சென்றான். அங்கே ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த யானைகளை சற்று உற்று கவனித்த அந்த சுற்றுலாப் பயணிக்கு ஒரே ஆச்சர்யம்.

அந்த பிரமாண்டமான விலங்கு ஒவ்வொன்றும் ஒரே ஒரு சிறு கயிற்றினால் மட்டும் கட்டப் பட்டிருந்தது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட, வலிமை மிக்க யானை அந்த சிறு கயிற்றை ஒரு நிமிடத்தில் அறுத்து கொண்டு போகலாம், ஆனால் அந்த யானை அதற்கான முயற்சி செய்வதில்லையே ஏன் என்று அவன் வியப்படைந்தான்.

அருகில் இருந்த பாகனிடம் சென்று அவன் கேட்டான் : "இவ்வளவு பெரிய யானைகள் இந்த சிறு கயிற்றை அறுத்து கொண்டு போய்விடாதா?"

பாகன் சிரித்துக்கொண்டே சொன்னான்: "இந்த யானைகள் சிறிய குட்டிகளாக இருக்கும்போது இந்த சிறிய கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அந்த குட்டி யானை இழுத்துப் பார்க்கும்போது, இந்த கயிற்றினை அதனால் அறுக்க முடியவில்லை. தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று முடிவு செய்த குட்டி யானை, முயற்சி செய்வதை கைவிட்டு விட்டது. அதே குட்டி யானை பெரிதாக வளர்ந்தபின்பும், தன்னால் அந்தக் கயிற்றை அறுக்க முடியாது என்ற தோல்வி மனப்பான்மை தொடர்வதால், அது பெரிதாய் வளர்ந்த பின்னரும் கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை."

பாகனின் பதிலைக் கேட்டு அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்!

வாழ்வில் ஏதோ ஒரு முறை முயற்சித்துப் பார்த்து அதில் தோற்றதும் துவண்டு போகிறோம்.
நம்மால் முடியாது என்று தோல்வி மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறோம்.
அணுகுமுறையை மாற்றினால்,
திறனையும், வலிமையையும் வளர்த்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தால் வெற்றி பெறலாம் என்ற அடிப்படை உண்மையை மறந்து விடுகிறோம்.

தோல்வி என்பது வெற்றியின் முதல் படி.
தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சிப்பது மட்டுமே வெற்றிபெற ஒரே வழி!

செய்யும் வேலையை 100 சதவீத அர்ப்பணிப்புடன் செய்!



ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் .

அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ?

இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்

சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப்
போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி
பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்.

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி

‪#‎நீதி‬ : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே, உன் மனத்திருப்திகாக வேலை செய்! செய்யும் வேலையை 100 சதவீத அர்ப்பணிப்புடன் செய்!

நீங்கள் வெற்றியாளரா?


உங்களால் அடிக்கடி மனம் விட்டு சிரிக்க முடிகிறதா? 
அறிவார்ந்த மனிதர்கள் உங்களை மதிக்கிறார்களா?

குழந்தைகள்  உங்களிடம் அன்பு காட்டுகிறார்களா? 

உங்களை நேர்மையான விமர்சகர்கள் பாராட்டுவதுண்டா?

போலி நண்பர்கள் உங்கள் முதுகில் குத்துவதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிறதா? 

இந்த உலகின் அழகை வியந்து ரசிக்க உங்களுக்குத் தெரிகிறதா?

மற்ற மனிதர்களின் சிறப்புகளை அடையாளம்கண்டு  பாராட்ட உங்களால் முடிகிறதா?

ஒரு பண்புள்ள குழந்தை வளர உதவியது,
மரங்கள் செடிகள் கொண்ட பசுமையான தோட்டத்தை உருவாக்கியது,
சமூக முன்னேற்றத்துக்கு உதவியது போன்ற
ஏதாவது ஒரு நல்ல அடையாளத்தை இந்த உலகில் நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா?

இந்த உலகில் ஒரு மனிதரின் வாழ்க்கையிலாவது நீங்கள் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறீர்களா?

உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் வெற்றிகரமான மனிதர்!  

Thursday, 10 March 2016

உங்கள் சுய மதிப்பை உயர்த்துங்கள்!


ஒருவரது உயர்வையும் தாழ்வையும் தீர்மானிக்கிற முக்கியமான காரணிகளில் ஒன்று சுயமதிப்பு. நமது இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சராசரி வாழ்க்கைக்குள் முடங்கிவிடுவதற்கு மிக முக்கியமான காரணம் குறைவான சுயமதிப்பு

உங்களை உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறது
சிறந்தவற்றைப் பெரும் தகுதி உங்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது
பிரச்சினைகள் வரும்போது அவை உங்களை மூழ்கடிக்க அனுமதிக்கிறீர்களா அல்லது துணிச்சலோடு தீர்வுகளைத் தேடுகிறீர்களா

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால் உங்கள் சுயமதிப்பு உங்களுக்குத் தெரியவரும்.  

நம்மில் பலரும், நம்மைப் பற்றிய சுயமதிப்பீட்டை குறைவாகவே வைத்திருக்கிறோம். 'நம்மைச் சுற்றியுள்ள சில வெற்றியாளர்களைப் போல் நமக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை' என்பதுபோன்ற தாழ்வான எண்ணங்கள் நமக்குள் தலைதூக்குவது இயல்பு. சற்றே அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நம்மைப் பற்றிய அந்தக் கருத்துக்கள்  தவறானவை என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்

'இந்த உலகில் எல்லாக் குழந்தைகளுமே மேதைகளாகத் தான் பிறக்கிறார்கள்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் மகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்மேதைகளாகப் பிறந்த நாம் எதற்கு சராசரி வாழ்க்கைக்குள் முடங்கவேண்டும்

சராசரி வாழ்க்கையைப் புழுக்கள் கூட வாழ்ந்து முடித்து விடமுடியும். நாம் சாதனை வாழ்க்கையை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்

சாதனை வாழ்க்கை வாழவேண்டும் என்றால் முதலில் நமது சுய மதிப்பை உயர்த்தவேண்டும்.

சிறு வயதில் இருந்து நாம் பெற்ற சிறிய, பெரிய வெற்றிகளை மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும்எதிர்காலத்தில் நமக்குப் பிடித்த துறையில் நாம் சாதிக்கவிருக்கும் வெற்றிகளை காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும்நிகழ்காலத்தில் நம் மனதுக்குள் நிகழ்த்தும் உரையாடலை நேர்மறையாக அமைக்கவேண்டும்

உங்கள் சுயபேச்சு எப்படி இருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள்தினம்தோறும் நாம் நமக்குள் 50 ஆயிரம் முறை பேசிக்கொள்வதாக உளவியல் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். 'எல்லோரும் என்னை விரும்புகிறார்கள்', 'என்னால் முடியும்', 'நான் சாதித்துக் காட்டுவேன்' என்பதுபோன்ற நேர்மறையான சுயபேச்சு கொண்டவர்கள் அனைவரும் ஜெயிக்கிறார்கள்.  

இன்று முதல் உங்கள் சிந்தனையை தன்னம்பிக்கை மிக்கதாக மாற்றுங்கள்உங்கள் சுயபேச்சை நேர்மறையானதாக மாற்றுங்கள்நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன், தலைநிமிர்ந்து வாழுங்கள்

அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் மனைவியும், பெண்ணுரிமைப் போராளியுமான எலியனார் ரூஸ்வெல்ட்டின் வரிகளை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்: "தங்கள் கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கே எதிர்காலம் சொந்தம்." 

Wednesday, 9 March 2016

காலம் பொன் போன்றது!

காலம் பொன் போன்றது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனினும் நம்மில் பலர், நேரத்தை பயனுள்ள வகையில் நிர்வகிக்கத் தவறி விடுகிறோம்.

நமது கையில் இருக்கும் பணிகளில் மிக முக்கியமான பணி எதுவோ, அதில் நமது உழைப்பை ஒருமுகப்படுத்துவதுதான் நேர நிர்வாகத்தின் சாராம்சம்.

பரேட்டோ விதி என்ற நேர நிர்வாக விதி பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நமது கையில் இருக்கும் பணிகளில் முக்கியத்துவம் மிகுந்த  20 சதவீத பணிகள், 80  சதவீத மதிப்பைக் கொண்டவை என்று கூறுகிறது பரேட்டோ விதி.

அதாவது, இன்றைய தினம் நீங்கள் 10 பணிகள் செய்ய வேண்டும் என்றால், அதில் 2 முக்கியப் பணிகள், மற்ற 8 பணிகளின் மதிப்புக்கு சமமானவை என்கிறது இந்த விதி.

இந்த விதிக்கு இணங்க, நான் கூறும் வேலைமுறையை இன்றுமுதல் பின்பற்றுங்கள்.

1. உங்களது ஒரு நாளுக்கான பணிகள் அனைத்தையும் முந்திய நாள் இரவே எழுதிவையுங்கள்.

2. அந்தப்  பணிகளில் 10  முக்கியப் பணிகளை அதிகாலையில் பட்டியல் இடுங்கள். 

3. அந்தப் பட்டியலில் 80  சதவீத மதிப்பைக் கொண்ட 2  அதிமுக்கியப் பணிகள் எவை என்பதை கவனமாக கண்டறிந்து அவற்றை பச்சை மையால் குறியிடுங்கள்.

4. அந்த 2 அதிமுக்கியப் பணிகளை சிறப்பாக செய்து முடித்திட உங்கள் நேரம், உழைப்பு, திறன்கள், தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.

5. அவை முடிந்தவுடன் அடுத்த கட்ட முக்கியத்துவம்வாய்ந்த 2 பணிகளை நிறைவேற்றுங்கள்.

இந்த நேரத்தில், இப்போதைய கணத்தில், நான் எந்த வேலையை செய்தால் அது  மிகச் சிறந்த பயனைத் தரும் என்று உங்களை நீங்களே அவ்வப்போது   கேள்வி கேளுங்கள். உங்கள் பதில் எதுவோ  அந்தப் பணியை நிறைவேற்றுங்கள். 

அதிசயிக்கத்தக்க பயனைத் தரும் 20 சதவீதப் பணிகளை அடையாளம் கண்டு உங்கள் உழைப்பை ஒன்றுகுவிக்கக் கற்றுகொண்டால் நீங்கள் வெற்றியாளர் ஆவது உறுதி.

வாழ்த்துகளுடன்
சுசி திருஞானம் 

Tuesday, 8 March 2016

எம்.ஜி.ஆர். கற்றுக் கொண்ட மனப் பக்குவம்!

இந்த உலகில் மாற்றமில்லாதது மாற்றம் மட்டுமே.

தோல்வி எப்படி நிரந்தரம் இல்லையோ அதேபோல் வெற்றி என்பதும் நிரந்தரம் இல்லை.

திரைத்துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் நம்பர் ஒன் இடமும் நிரந்தரம் இல்லை.

நம்பர் 1 இடம் நிலையில்லாதது - அது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் மூலம் அழகாக விளக்குகிறார்.

எம்.ஜி.ஆர்., எழுதுகிறார்:

"என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது.

அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர்.

அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர்.

அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று.

படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.

நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம்.

அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.

எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.

மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.

நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.

மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவப் பாடமாக வழங்கினர். நானும் அன்றே அந்த அனுபவப் பாடத்தை மனதில் வாங்கிக் கொண்டேன்.

இந்தக் காட்சிகளை நேரடியாக அனுபவித்த நான், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி நம்புவது?

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான்.

இந்த மயக்க நிலையை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை மிக்க  கலைஞனாக இயங்க முடியாது.

கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!

ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாகாமலும், தாழ்வு மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமலும், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் முழு ஈடுபாடு கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது.

மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய மனிதாபிமான உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்."

— 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது


Sunday, 6 March 2016

வாசிப்போம்! சாதிப்போம்!

reading
நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை” என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின்.
நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள்.
புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், புத்தகங்கள் நம்பிக்கை மாளிகையின் கதவுகள். புத்தகங்கள் நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள்.
புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளான் பேரறிஞன் தாமஸ் ஜெஃஅபர்சன்.
வரலாற்றை மாற்றிய புத்தகங்கள்
—————————————–
மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பதில் மகத்தான பாத்திரம் புத்தகங்களுக்கு ஊண்டு.
காட்டுமிராண்டிகளின் கூடாரமாக காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபியூசியஸ் எழுதிய புத்தகங்களும், அவர் நடத்திய விடாப்பிடியான விழிப்புணர்வு இயக்கமும்.
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய பயணங்கள் என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த அமெரிக்கா வரலாற்றின் தலைவிதியை நிர்ணயிக்கும் வலிமை மிக்க நாடாக மாறிவிட்டது.
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைக்கால கிரேக்க தத்துவாசிரியர்களின் நூல்களையும், சிஸரோ, செனீக்கா போன்ற பண்டைக்கால லத்தீன் எழுத்தாளர்களின் நூல்களையும், தேடித்தேடிப் படிக்கும் தீவிர ஆர்வம் 14 ஆம் நூற்றாண்டின்போது ஐரோப்பாவில் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் விளைவுதான் ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கமும், அதன் தொடர்ச்சியாக உருவான தொழில் புரட்சியும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய “அன்ட்டூ திஸ் லாஸ்ட்” புத்தகத்தைக் குறிப்பிடுகிறார்.
“ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புக்களைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன்” என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாட்களில் விளக்கினார் காந்தியடிகள்.
இப்படி உலகின் எல்லாப் பகுதிகளிலும் வரலாற்றின் திசைப்போக்கை நிர்ணயித்திருப்பதும், வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைவழியை நிர்ணயித்திருப்பதும் புத்தகங்கள்தாம்.
தேர்வு செய்யுங்கள்
————————
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும்? உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும்? உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.
நேரம் ஒதுக்குங்கள்
————————-
நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர், 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின, இத்தனை ஆற்றல் மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான்.
“ஓவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக்குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன்.”
அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை.
வாசிப்பு உத்திகளைக் கையாளுங்கள்
———————————————–
உலகெங்கும் தலைசிறந்த மாணவர்களிடையே பிரபலமாகிவரும் PQRST( Preview Questioning. Reading, Self-recital, Test) என்ற படிப்பு உத்தியை, புத்தகங்கள் வாசிக்க நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
1. ஒட்டுமொத்தப் பார்வை:
எடுத்தவுடன் புத்தகத்தின் வரிகளில் ஆழ்ந்துவிட வேண்டாம். புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தலைப்பு, ஆசிரியர், முன்னுரை, உபதலைப்புகள், படங்கள், பின் அட்டை எனப் புத்தகத்தைப் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கிக் கொள்வதுதான் வாசிப்பின் முதல் படி.
2. கேள்விகளை ஊருவாக்குதல்:
புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள்.
3. வாசித்தல்:
இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது.
4. நினைவுபடுத்திப் பார்த்தல்:
வாசித்து முடித்து ஒரு மணிநேரத்தில் அனேக பகுதிகளை மறந்துவிடுவது மனித இயல்பு. அப்படி மறக்கத் தொடங்கும் நேரத்தில் படித்ததை நினைவுபடுத்தி மனதுக்குள் சொல்லிப் பார்ப்பதால் படித்தது மனதில் தங்கும்.
5. எழுதிவைத்தல்:
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துக்களையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாட்களில் ஒரு அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துக்களை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.
வாசிக்கும் நாடாகட்டும் இந்தியா!
——————————————
அமெரிக்கர்களில் பலரும் பல துறைகளில் சாதனைமேல் சாதனை படைப்பவர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அங்கே விதைக்கப்பட்டிருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம். அமெரிக்க இளைஞர்களிடம் இந்த ஆர்வத்தை தூண்டுவதில் அங்குள்ள அறிவுஜீவிகள் உணர்வுபூர்வமாகச் செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவையே புத்தகம் படிக்கும் நாடாக மாற்றும்வரை ஓயப்போவதில்லை என்று சபதம் எடுத்துச் செயல்படுகிறார் தொலைக்காட்சி டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்ஃப்ரே.
உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும்.
வாசிப்போம்! சாதிப்போம்!